பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம்: மத்திய அரசு ஒப்புதல்
புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு நிலத்தை ஒதுக்கி உள்ளது. இதற்காக அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இந்திரா அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்தவர். மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இதன் பிறகு ஜனாதிபதியாக இருந்தார். அவர், கடந்த 2020 ஆக., 31ல் காலமானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரணாப் முகர்ஜி மகள் சர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், ' எனது தந்தை இறந்தபோது, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூட காங்கிரஸ் கருதவில்லை. ஜனாதிபதி 4 பேருக்கு இவ்வாறு கூட்டவில்லை என மூத்த தலைவர் ஒருவர் கூறினார். கே.ஆர்.நாராயணன் மறைவை அடுத்து காங்., செயற்குழு கூட்டியதும், இரங்கல் தீர்மானத்தை தயார் செய்ததும் அப்பாதான் என அவரது நாட் குறிப்பு மூலம் பின்னர் தெரிந்து கொண்டது வேதனையாக இருந்தது. மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது ஒரு சிறந்த யோசனை. ஜனாதிபதியாக எனது தந்தை இருந்தபோது, மன்மோகன் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க விரும்பினார். ஆனால், இரண்டு காரணங்களில் அது நடக்கவில்லை எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி, ராஜ்காட்டின் ஒரு பகுதியான ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் இந்த நினைவிடம் அமைய உள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து சர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது தந்தைக்கு நினைவிடம் அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசின் முடிவுக்காக பிரதமர் மோடியை சந்தித்து மனதார எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக நாங்கள் கேட்காத போதும், அனுமதி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமரின் எதிர்பாராத இந்த கருணையால் மகிழ்ச்சி ஏற்பட்டது.
அரசு மரியாதையை கேட்கக்கூடாது. அரசே வழங்க வேண்டும் என தந்தை அடிக்கடி கூறுவார். அவரின் நினைவைப் போற்றும் வகையில், பிரதமர் மோடி இதைச் செய்ததற்கு நான் மிகவும் நன்றி உள்ளவராக இருக்கிறேன். அவரது மகளாக எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.