ரயில் நிலையத்தில் தவறவிட்ட பணம் முதியவரிடம் ஒப்படைப்பு

சிதம்பரம் : சிதம்பரம் ரயில் நிலையத்தில், முதியவர் தவறி விட்ட பணம் உள்ளிட்ட பொருட்களை, ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

சிதம்பரம் ரயில் நிலைய கேண்டீன் அருகில், நேற்று முன்தினம் கேட்பாரற்று கிடந்த, கருப்பு கலர் பேக் ஒன்றை, ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி, நடைமேடை அலுவலர் ஹரிகிருஷ்ணன் கண்டெடுத்தனர். அதில், 20 ஆயிரம் ரொக்கம், துணிமணிகள், மொபைல் போன் மற்றும் ஆதார், ரேஷன், பேன் கார்டுகள் இருந்தது. அதில், சென்னை அம்பத்துாரை சேர்ந்த ராமலிங்கம், 84; என முகவரி இருந்தது. அதனைத் தொடர்ந்து, ரயில்வே மேலாளரிடம் பேக் ஒப்படைக்கப்பட்டது.

அதே சமயம், பேக்கை தவற விட்ட முதியவர் மீண்டும் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து, தான் தவற விட்ட பேக் குறித்து விசாரித்துள்ளார். தொடர்ந்து விசாரணையில், அவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் என்பதும், வீட்டில் கோபித்துக் கொண்டு ரயிலில் வரும்போது சிதம்பரத்தில், பேக் தவறவிட்டதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து முதியவரிடம் பேக் மற்றும் பணத்தை ஒப்படைத்தனர். மேலும், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், போலீசார் மணிகண்டன் ஆகியோர் முதியவரை அழைத்து சென்று அவரது வீட்டில் ஒப்படைத்தனர்.

Advertisement