அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; 3 பேர் பலி; 6 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்

1

திஸ்பூர்: அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி உள்ள ஒன்பது தொழிலாளர்களின் மூன்று பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள ஆறு பேரை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.


@1br அசாம் மாநிலம், டிமா ஹசாவ் மாவட்டம் உம்ரங்சோ என்ற பகுதியில் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் வழக்கம் போல் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று எதிர்பாராத விதமாக சுரங்கத்தினுள் வெள்ளம் புகுந்தது. சுரங்கத்தில் தொழிலாளர்கள் 9 பேர் சிக்கிக்கொண்டனர். இதில் தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள தொழிலாளர்கள் ஆறு பேரை, மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 30 பேர் கொண்ட குழு, மாநில மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.



இதற்கிடையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், நிலக்கரி சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவம் குறித்து விசாரிக்க சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, பனிஷ் நுனிசா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.



மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது; 300 அடி குழி உள்ளது, அதிலிருந்து வெவ்வேறு திசைகளில் எலி துளை சுரங்கங்கள் உள்ளன. சுரங்கத் தொழிலாளர்கள் தோண்டும் போது, ​​ திடீரென வெள்ள நீர் உட்புகுந்து உள்ளது. சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் ஆறு பேர் இருக்கும் இடத்தை கண்டறிய சிரமமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement