பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம்: இந்திய வம்சாவளி எம்.பி., சுஹாஸ் சுப்ரமணியம் நெகிழ்ச்சி
வாஷிங்டன்: அமெரிக்காவில் காங்கிரஸ் உறுப்பினராக தேர்வாகிய இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து வரலாறு படைத்தார்,
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம், புனித இந்து நூலான பகவத் கீதையின் மீது பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
வர்ஜீனியாவின் 13வது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுப்ரமணியம், அமெரிக்க கிழக்கு கடற்கரையிலிருந்து காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி ஆவார். உலகின் மிக சக்திவாய்ந்த அரசியல் அமைப்புகளில் ஒன்றான அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினராக தனது மகன் சத்தியப்பிரமாணம் செய்வதைக் கண்ட அவரது தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹிந்து அமெரிக்கரான துளசி கபார்ட்டை தொடர்ந்து, சுப்ரமணியம் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 2வது நபராக தேர்வாகி உள்ளார்.
அவரது முன்னோடியாக இருந்த கபார்ட், 2013ம் ஆண்டு கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து, காங்கிரஸின் முதல் உறுப்பினராக இருந்தார். பகவத் கீதையின் மீது உறுதிமொழி எடுப்பது என்பது அமெரிக்காவில் உள்ள அரசியலில் ஹிந்து- அமெரிக்கர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான அடையாளம் ஆகும்.
காங்கிரஸில் தற்போதைய பதவிக்கு முன், சுப்ரமணியம் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் கொள்கை ஆலோசகராக பணிபுரிந்தார். 2019ல் வர்ஜீனியாவின் பொதுச் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பொருளாதார மேம்பாடு மற்றும் பொது சுகாதாரம் போன்ற பல்வேறு பிரச்னைகளைக் கையாண்டார்.
பதவியேற்பு விழா குறித்து சுப்ரமணியம் வெளியிட்டுள்ள கூறுகையில்,
'என் அம்மா இந்தியாவில் இருந்து டல்லெஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவரது மகன் வர்ஜீனியாவை காங்கிரஸில் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று நீங்கள் கூறியிருந்தால், அவர் உங்களை நம்பியிருக்க மாட்டார்.
எனது வெற்றி, தெற்காசிய மக்களுக்கும், அமெரிக்க அரசியலில் உள்ள பல இந்திய பிரதிநிதிகளுக்கும் குறிப்பிடத்தக்க சாதனை' என்றார்.
சுப்ரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸில் உள்ள இந்திய வம்சாவளியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது நான்காக உயர்ந்துள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க இந்திய- அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகியோர் அடங்குவர்.