முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து; வங்கதேச அரசு நடவடிக்கை

3

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை அந்த நாட்டு இடைக்கால அரசு ரத்து செய்துள்ளது.



நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணவர் அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடும் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. புதிய ஆட்சி பதவியேற்றது முதல், அங்குள்ள கோவில்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன.

இந்நிலையில், வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, நேற்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 2வது முறையாக கைது வாரண்ட் பிறப்பித்தது.


மர்மமான முறையில் ஏராளமானோர் காணாமல் போக காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு கைது செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 12ம் தேதிக்குள் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.


இந்நிலையில், இன்று (ஜன.,07) வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்துள்ளது. மொத்தம் 97 நபர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 22 பேர் குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர். 75 பேர் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டத்தின் போது கொலைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை எதிர் கொள்கின்றனர்.

Advertisement