மீஞ்சூர் ரயில்வே கேட் இடுக்குகளில் பைக்குகள் புகுந்து செல்வதை தடுக்க தடுப்பு
மீஞ்சூர்:மீஞ்சூர் -- நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுககு இடையே, எல்.சி. 16., ரயில்வே கேட் அமைந்து உள்ளது. இதன் குறுக்கே, மீஞ்சூர் - காட்டூர் மாநில நெடுஞ்சாலை இருக்கிறது. அரியன்வாயல், நெய்தவாயல், திருவெள்ளவாயல், காட்டூர் உள்ளிட்ட, 70 கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.
இங்கு 67.95 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. ரயில்வே கேட்டில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருப்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரங்களில், அதன் அருகே உள்ள இடுக்குகளில் புகுந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், இருசக்கர வாகன ஒட்டிகள் பாதுகாப்பு மற்றும் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ரயில்வே கேட் பகுதியில் உள்ள சிறு பாதைகளை அடைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. அதே சமயம், வாகன ஓட்டிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை, ரயில்வே போலீசார் பாதுகாப்புடன், இரும்பு தடுப்புகள் கொண்டு இருசக்கர வாகனங்கள் புகுந்து செல்லும் பாதைகளை மூடி தடுப்பு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்கிறோம். அவசர வேலையாக செல்வதற்கு இதை பயன்படுத்துவோம். இதை அடைக்கக்கூடாது என, தெரிவித்தனர்.
இந்த மார்க்கத்தில் விரைவு ரயில்களின் வேகம் அதிகப்படுத்தப்படுத்தவும், கூடுதல் ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதால், அனைத்து ரயில்வே கேட்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதையடுத்து, வாகன ஓட்டிகள் கலைந்து சென்றனர். வாகன ஓட்டிகளின் கோரிக்கை, அவர்களின் பாதுகாப்பு கருதி நிராகரிக்கப்பட்டு, தடுப்பு அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.