மானாமதுரை பள்ளியில் பீரோக்கள் உடைப்பு ஆவணங்கள் திருட்டா என விசாரணை

மானாமதுரை:மானாமதுரையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் அலுவலக அறையில் உள்ள பீரோக்கள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் திருடப்பட்டுள்ளனவா என போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் ஏராளமானோர் படித்து வந்த நிலையில் தற்போது 300க்கும் குறைவானவர்களே படிக்கின்றனர். இங்கு பணியாற்றி வரும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களுக்குள் அடிக்கடி ஜாதி ரீதியாக மோதிக் கொள்வதாலும், மாணவர்கள் சிலர் பள்ளிக்குள் போதை பொருள், ஆயுதங்களுடனும் வந்ததால் மற்ற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.

கலெக்டர் ஆஷா அஜித் இப்பள்ளியில் கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் கிருஷ்ணகுமார், டி.எஸ்.பி.,நிரேஸ் தலைமையில் கண்காணிப்பு கூட்டங்களை நடத்தவும், மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து நல்வழிப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். மாணவர்கள் சிலர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை இங்கு கேட் உடைக்கப்பட்ட நிலையில் தலைமையாசிரியர் அறையில் உள்ள பீரோ மற்றும் அலுவலக அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. டி.எஸ்.பி., நிரேஷ், போலீசார் பள்ளிக்கு சென்று சான்றிதழ், கோப்புகள் மர்மநபர்களால் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரித்தனர். அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்த உண்டியலையும் உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

போலீசார் கூறியதாவது: இதில் ஈடுபட்டவர்கள் குறித்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கிறோம் என்றனர்.

Advertisement