மதுரையில் எச்.எம்.பி., வைரஸ் தாக்கமில்லை
மதுரை: மதுரையில் (ஹூயூமன் மெட்டா நியூமோ) எச்.எம்.பி., எனப்படும் வைரஸ் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகவில்லை என மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் குமரகுருபரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
எச்.எம்.பி., வைரஸ் வந்தால் சாதாரண 'ப்ளூ' காய்ச்சலுக்குரிய இருமல்,மூக்கில், சளிஒழுகுதல், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் வரும். உயிருக்கான ஆபத்தான நோய் இல்லை. சீனாவில் சமீபகாலமாக 'ப்ளூ' காய்ச்சல் அதிகரித்துள்ளதால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் 'ஹெல்த் எமர்ஜென்சி' என்று இதை அறிவிக்கவில்லை.
'ப்ளூ' காய்ச்சல் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தால் 'பாசிடிவ்' என வரலாம். இந்த காய்ச்சல் தானாக வந்து தானாக சரியாகி விடும். பருவகால நோய் என்பதால் பயப்பட ஒன்றுமில்லை. காய்ச்சல் அதிகமானால் டாக்டர் பரிந்துரைப்படி மாத்திரை சாப்பிட வேண்டும்.
மதுரையில் நேற்றுமுன்தினம் 19 பேரும் நேற்று 24 பேரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 89 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் குழந்தைகள் 13 பேர். டெங்கு பாசிடிவ் இல்லை.
விமான நிலையத்தில் பயணிகளிடம் எம் பாக்ஸ், எச்.எம்.பி. வி வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதால் காய்ச்சல் வந்தால் எளிதில் கண்டுபிடித்து தனிமைப்படுத்தலாம் என்றார்.