மதுரையில் பேரணி; 5 ஆயிரம் பேர் மீது பாய்ந்தது வழக்கு
மதுரை; டங்ஸ்ட்ன் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டவர்களில் 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும்,மேலூர் முல்லை பெரியாறு ஒருபோக பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வலியுறுத்தியும் பொதுமக்கள், விவசாயிகள் போராடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மேலூர் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள், கிராம மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் நேற்று (ஜன.7) பேரணி சென்றனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியானது,மேலூரில் இருந்து மதுரை தமுக்கம் தபால் நிலையம் வரை நடைபெற்றது.
பேரணியின் போது, சுங்கச்சாவடி அருகே போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் முன்னே செல்ல, அவர்கள் அணிவகுப்பை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர்.
பேரணியின் எதிரொலியாக, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. இந் நிலையில், கட்டுப்பாடுகளை மீறி பேரணி சென்றதாக போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். பேரணியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் காணும் பணியிலும் போலீசார் இறங்கி உள்ளனர்.