ரோட்டில் சுற்றும் கால்நடைகளால் தடுமாறும் மக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தினமும் ஏராளமான வாகனஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடை கின்றனர்.

இதைத்தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்குள்ள ஆர்.எம்.காலனி, பஸ் ஸ்டாண்ட், ரவுண்ட்ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எந்நேரமும் மாடுகள் ரோட்டோரங்களில் சுற்றுகின்றன.

இவைகளின் உறவினர்கள் முறையாக பராமரித்து உணவளிக்காததால் மாடுகள் ரோட்டோரங்களில் கிடக்கும் குப்பைகள்,உணவுக்கழிவுகளை உண்ணுவதற்காக வாகன ஓட்டிகளின் மத்தியில் அங்கும் இங்குமாய் சுற்றுகின்றன.

இதனால் ரோடுகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது மாடுகள் சர்வ சாதாரணமாக முட்டி தாக்குகின்றன. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு காயமடைகின்றனர். சில நேரங்களில் மாடுகள் ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகளையும் தாக்கும் நிலையும் அடிக்கடி நடக்கின்றன.

தொடரும் இப்பிரச்னையால் பலரும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் புகார் கொடுக்கும் நேரத்தில் மட்டும் மாடுகளை பிடிப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி விட்டு மற்ற நேரத்தில் மவுனமாக இருக்கின்றனர்.

சிலர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களது மாடுகளை அதிகாரிகள் பிடிக்காமல் இருப்பது போன்று செய்கின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் முதல் பொது மக்கள் வரை ரோட்டில் நிம்மதியாக யாருமே பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடரும் இப்பிரச்னையை தடுத்து மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடரும் விபத்துக்கள்



பவுன்ராஜ், தே.மு.தி.க., மாவட்ட இளைஞரணி செயலாளர்,திண்டுக்கல்: ரோட்டோரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

பள்ளி செல்லும் குழந்தைகளை கூட சில நேரங்களில் முட்டி தள்ளுகின்றனர்.

இதற்கு கடிவாளம் போட வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மாடுகளின் உரிமையாளர்களும் தங்களுக்கு என்ன என இருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் கால்நடைகளால் விபத்துக்கள் தான் நடக்கிறது.

மாநகராட்சி நிர்வாகவும் இனியாவது ரோட்டில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

கோசாலை வேண்டும்



விக்னேஷ், தொழிலதிபர், திண்டுக்கல்: நத்தம் ரோடு வழியாக ஏராளமான வாகன ஓட்டிகள் செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஏராளமான மாடுகள் ரோட்டில் சுற்றுகின்றன.

இதனால் பலரும் விபத்துக்களில் சிக்கி கை,கால்களை இழக்கும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. மாடுகளை வளர்ப்போர் அதை பராமரிக்க தவறியதால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் மாநகராட்சி பகுதிகளில் பிடிபடும் மாடுகளை பராமரிக்க கோசாலை அமைக்க வேண்டும்.

Advertisement