15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகத்தால் தவிப்பு ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சி அடிப்படை வசதிக்கு அல்லாடும் மக்கள்
ஆண்டிபட்டி: கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியம், ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
இந்த ஊராட்சியில் அண்ணாநகர், டாணா தோட்டம், பழைய ராமச்சந்திராபுரம், பழைய ஆத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை.
வரி வசூல் மூலம் வருவாய் இல்லாத இந்த ஊராட்சியில் தெருக்களில் சிமென்ட் ரோடு, கழிவுநீர் வடிகால், தெரு விளக்கு வசதி பல இடங்களில் இல்லை.
கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதனை நிறைவேற்றுவதற்கு நிதி வசதி இல்லாததால் ஊராட்சி நிர்வாகமும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியாமல் திணறுகிறது.
ஊராட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
இருளில் முழ்கிய தெருக்கள்
பிரபு, ராஜேந்திராநகர்: கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் தினமும் கிடைப்பதில்லை. 10நாள், 15 நாள், ஒரு மாதம் சில நாட்களில் மூன்று மாதம் வரை குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
போர்வெல் மூலம் கிடைக்கும் நீரை பலரும் பயன்படுத்துகின்றனர். தெருக்களில் குவியும் குப்பை, சுத்தம் செய்யப்படாத வடிகால் இவற்றால் கொசுத்தொல்லை அதிகமாகிறது.
பல தெருக்களில் சிமென்ட் ரோடு, பேபர் பிளாக் வசதி செய்ய வில்லை. புதிய தெரு விளக்குகள் அமைக்க மின் கம்பங்கள் கொண்டு வரப்பட்டு பல வாரங்களாகியும் இன்னும் செயல்பாட்டிற்கான பணிகள் துவங்கவில்லை. பல தெருக்கள் இருளில் மூழ்கி உள்ளது.
நூலகத்திற்கான கட்டிட வசதி இருந்தும் பல மாதங்களாக பராமரிப்பின்றி மூடிக்கிடக்கிறது. இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கால்நடை கிளை நிலையம் தேவை
முத்துக்காளை, ராஜேந்திரா நகர்: பெண்களுக்கான கழிப்பறை பல மாதமாக செயல்படாமல் மூடிக் கிடக்கிறது. ஆண், பெண்களுக்கு தனித்தனி நவீன கழிப்பறை வசதி கேட்டும் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
கால்நடை மருந்தகம் இல்லாததால் 3 கி.மீ., தூரம் கண்டமனூருக்கு நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டி உள்ளது. சிரமத்தால் கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிப்படைகிறது. ஊராட்சியில் பணிகளை மேற்கொள்ள நிரந்தரமான ஊராட்சி செயலாளர் இல்லாததால் ஊராட்சி பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மின்வாரியம் அலட்சியம்
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: புதிய தெருவிளக்குகள் அமைக்க மின்வாரியத்திற்கு பணம் செலுத்தி ஓராண்டுக்கு மேலாகிறது. மின் துறையில் ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி புதிய தெரு விளக்குகள் அமைப்பதை இழுத்தடிப்பு செய்கின்றனர்.
மாநில நிதிக்குழு மானியம் குறைவாக கிடைப்பதால் அடிப்படை வசதிகளுக்கான செலவினங்களை கூட மேற்கொள்ள முடியவில்லை.
குடிநீர் வாரியம் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட குடிநீரை முழுமையாக வழங்குவதில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. போர்வெல் நீர் மூலம் குடிநீர் தேவை சமாளிக்கின்றனர் என்றனர்.