ஞாயிறும் பத்திரப்பதிவு செய்யலாம்; விரைவில் வருகிறது புதிய வசதி

6


சென்னை : வீடு, மனை வாங்குவோர் அதற்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஞாயிற்றுக்கிழமையும் பதிவு செய்வதற்கான வசதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


தமிழகம் முழுதும், 582 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. சொத்து வாங்குவோர், அது தொடர்பான அடிப்படை விபரங்களை, 'ஆன்லைன்' வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.



சொத்தின் மதிப்பு அடிப்படையில் முத்திரை தீர்வை, பதிவு கட்டணங்களையும் ஆன்லைன் வழியே செலுத்த வேண்டும்.



இதன்பின், பத்திரப்பதிவுக்கான நாள், நேரம் ஒதுக்கப்பட்டு, அதற்கான, 'டோக்கன்' வழங்கப்படும். இதில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் சென்று, பத்திரப்பதிவை முடிக்கலாம்.


திங்கள் முதல் வெள்ளி வரை, சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். சொத்து வாங்குவோர் வேலைக்கு விடுப்பு எடுத்து வந்து, பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டியுள்ளது.


இதை புரிந்துள்ள பதிவுத்துறை, மக்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையில், சனிக்கிழமையும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் திட்டத்தை, 2023ல் அறிமுகப்படுத்தியது.



முதற்கட்டமாக, 100 சார் - பதிவாளர் அலுவலகங்களில் இந்த வசதி அமலானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சார் - பதிவாளர்கள், பணியாளர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, பதிவுத்துறை தலைமையக அதிகாரி ஒருவர் கூறியதாவது:



சொத்து வாங்குவோர் மத்தியில், சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்வதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை மேம்படுத்தம் வகையில், ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான வசதியை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறோம்.



விடுமுறை நாள் என்ற அடிப்படையில், 1,000 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தி, பத்திரப்பதிவு மேற்கொள்ள மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

ஞாயிற்றுக்கிழமையும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், சொத்து வாங்குவோர் சிரமம் இன்றி பத்திரப்பதிவு மேற்கொள்ள வழி ஏற்படும். எந்தெந்த அலுவலகங்களில், இதை செயல்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement