ஊராட்சி ஒன்றியங்கள் மறுசீரமைப்பு

1



சென்னை: 'தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகள் விரிவாக்கத்தை தொடர்ந்து, கிராம ஊராட்சி ஒன்றியங்கள் மறு சீரமைக்கப்படும்' என, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட, 16 மாநகராட்சிகள்; 41 நகராட்சிகள்; 25 பேரூராட்சிகள், அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.


மேலும், 13 நகராட்சிகள்; 25 பேரூராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால், கிராம ஊராட்சிகள் எண்ணிக்கை குறைவதுடன், ஊராட்சி ஒன்றியங்களை மறு சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



ஒன்றியங்களில் இருந்து, கிராம ஊராட்சிகள், நகர்ப்புறங்களில் இணைக்கப்படுவதால், அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை குறைகிறது. புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியான, தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம் போன்றவை, ஏற்கனவே சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

தற்போது, நாரவாரிக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள் அங்கு இணைக்கப்பட உள்ளன. இதனால், புழல் ஒன்றியம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் இருந்து நீக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:



ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன், கிராம ஊராட்சி ஒன்றியங்களை மறு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில், 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் வருகின்றன. அவை, இரண்டு மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்படும். அதேபோல, ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், கிராம ஊராட்சிகள், ஒன்றியங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இப்பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement