ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள்

சென்னை: தமிழகத்தில், 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, தனி அதிகாரி களை அரசு நியமித்து உள்ளது.

தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.


இதில், ஊரக உள்ளாட்சிகளில், 36 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 5,471 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 12,525 ஊராட்சி தலைவர்கள், 88,327 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகள் உள்ளன.


இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள, 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல், 2019 டிசம்பரில் நடந்தது.



சென்னையில் ஊரக உள்ளாட்சிகள் இல்லாததால் தேர்தல் நடக்கவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பேற்றவர்களுக்கான பதவிக்காலம், நேற்றுடன் முடிந்தது.

இதையடுத்து, புதிதாக உருவான மயிலாடுதுறை மாவட்டத்துடன் சேர்த்து, 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளை நிர்வகிக்க, தனி அதிகாரிகளை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.



அதன்படி, மாவட்ட ஊராட்சிகளை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குனர்கள் நிர்வகிக்க உள்ளனர். ஊராட்சி ஒன்றியங்களை, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்களும், ஊராட்சிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் நிர்வகிக்கவுள்ளனர்.


தற்போது வகிக்கும் பதவியுடன், கூடுதலாக இப்பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும்
எனவும், அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ஆணையர் பொன்னையா ஆகியோர் பிறப்பித்து உள்ளனர்.

Advertisement