நக்சல் தாக்குதலில் 8 வீரர்கள் பலி அட்டூழியம் ! சத்தீஸ்கரில் தீவிர தேடுதல் வேட்டை
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்ட வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு பணிக்காக ரோந்து சென்ற ரிசர்வ் படையினரின் வாகனத்தை, நக்சல்கள் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்ததில், எட்டு வீரர்கள் மற்றும் வாகனத்தின் டிரைவர் என மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய நக்சல்களை பிடிக்க, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பிராந்தியத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளது. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இவர்கள், இங்கு உள்ள அடர்ந்த வனப்பகுதியை சாதகமாக பயன்படுத்தி பதுங்கியுள்ளனர்.
அவர்களை ஒழித்து கட்டும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும் சத்தீஸ்கரில் 217 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டின் முதல் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை, பிஜப்பூர் மாவட்டம் அபுஜ்மாத் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பகுதி சுதந்திரம் அடைந்ததில் இருந்து, கணக்கெடுப்பு செய்யப்படாத பரந்த வனப்பகுதியாக உள்ளது. கோவா மாநிலத்தை விட நிலப்பரப்பில் பெரிய அளவிலானது. நாட்டின் முக்கிய நக்சல் தலைவர்களின் கடைசி புகலிடமாக இது கருதப்படுகிறது.
சுற்றி வளைப்பு
இங்கு கடந்த 3ம் தேதி மாலை, மாநில போலீஸ் பிரிவைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் சிறப்பு படையினர், நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மறுநாள் 4ம் தேதி மாலை, நக்சல்கள் பதுங்கியிருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீஸ் படையினர் - நக்சல்கள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த தாக்குதலில், நக்சல்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர்; மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அதன் பின், இரண்டு நாட்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட ரிசர்வ் படையினர் நேற்று தந்தேவாடா மாவட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மதியம் 2:30 மணியளவில், அபுஜ்மாத் அருகே குத்ரு என்ற பகுதியை ரிசர்வ் படையினர் சென்ற 'ஸ்கார்பியோ' கார் கடந்தது.
அப்போது, சாலையில் பதுக்கி வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டை நக்சல்கள் வெடிக்கச் செய்தனர். இதில், வீரர்கள் பயணித்த ஸ்கார்பியோ கார் வெடித்து சிதறியது.
அதில் பயணித்த ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த எட்டு வீரர்கள் மற்றும் காரின் ஓட்டுனர் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது.
கடும் கண்டனம்
இது குறித்து பஸ்தார் பிராந்திய ஐ.ஜி., சுந்தர்ராஜ் கூறுகையில், ''அபுஜ்மாத் பகுதியில் மூன்று நாள் நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பின், ரிசர்வ் படையினர் நேற்று முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
''அப்போது, 70 கிலோ வெடிகுண்டை சாலையின் நடுவே மறைத்து வைத்து, நக்சல்கள் வெடிக்கச் செய்துள்ளனர். இதில், காரில் பயணித்த அனைவரும் இறந்தனர். இந்த தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
''சம்பவ இடத்தை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், பல நாட்களுக்கு முன் வெடிகுண்டு அங்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய நக்சல்களை பிடிக்க, கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்,'' என்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
''நக்சல்களுக்கு எதிராக அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கையால் விரக்தியடைந்துள்ள அவர்கள், இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் இன்னும் கடுமையாக்கப்படும்,'' என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட அறிக்கை: சத்தீஸ்கரின் பிஜப்பூரில் மாவட்ட ரிசர்வ் படையினர், நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நம் வீரர்கள் இறப்பிற்கு பதிலடியாக, 2026 மார்ச்க்குள் இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.