ஏ.எப்.டி.,யில் கட்டுமான பணி மில் தொழிலாளர்கள் போராட்டம்

புதுச்சேரி: ஏ.எப்.டி., மில் வளாகத்தில் நடந்த மேம்பாலத்திற்கான கட்டுமான பணியை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நிறுத்தப்பட்டது.

பிரஞ்சு ஆட்சியாளர்களால் கடந்த 1898ம் ஆண்டு துவக்கப்பட்ட ஆங்கிலோ பிரஞ்சு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் (ஏ.எப்.டி.) மில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் மூடப்பட்டது.

மில்லில் பணியாற்றிய 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 13 மாத சம்பளம், இழப்பீடு நிலுவை தொகை உள்ளிட்டவை வழங்க கோரி ஏ.எப்.டி., மில் ஒருங்கிணைந்த ஊழியர்கள் கூட்டமைப்பினர் போராடி வருகின்றனர்.

கடந்த சட்டசபை கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க ரூ. 24 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை சேரவில்லை.

இந்நிலையில், புதுச்சேரி - கடலுார் சாலை ரயில் பாதையில், புதிய ரயில்வே மேம்பாலம் கட்ட பூமி பூஜையுடன் பணிகள் துவங்கியுள்ளது.

பாலத்திற்கு தேவையான ரெடிமேட் கட்டுமானங்கள் தயார் செய்ய ஏ.எப்.டி., மில் வளாகத்தின் ஒரு பகுதி கட்டுமான நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இதனை அறிந்த ஏ.எப்.டி., மில் தொழிலாளர்கள், கூட்டமைப்பு பொறுப்பாளர் முத்தமிழன் தலைமையில் திரண்டு, தங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு நிலுவை தொகையை வழங்கிய பின்பு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதனால் ஏ.எப்.டி., மில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.

Advertisement