சுரங்கத்திற்குள் 18 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு
குவஹாத்தி : அசாமில், 300 அடி ஆழமுள்ள நிலக்கரி சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததில், தொழிலாளர்கள் 18 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் திமா ஹசாவோ மாவட்டத்தின் உமராங்சோ பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. 300 அடி ஆழம் கொண்ட இந்த சுரங்கத்தில், 'ரேட் ஹோல்' எனப்படும் எலி வளை என்ற முறையில் சுரங்கத்தில் உள்ள நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சுரங்கத்திற்குள் நேற்று தண்ணீர் புகுந்ததாக தகவல் வெளியானது. இதில், 18 தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, சுரங்கத்திற்குள் புகுந்த நீரை, பம்புகள் வாயிலாக வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவின் உதவியுடன் தொழிலாளர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.