டங்ஸ்டன் விவகாரத்திற்கு மூலகாரணம் இவர்தான்: அ.தி.மு.க., எம்.பி., மீது குற்றச்சாட்டு!

9

சென்னை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணமே அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை தான் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


@1brசட்டசபையில் அவர் பேசியதாவது; தாம் முதல்வராக இருக்கும் வரையில் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க விட மாட்டோம் என்று நெஞ்சுரத்துடன் கூறி உள்ளார். அப்படி அறிவித்த தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.


இந்த பிரச்னையின் ரிஷி மூலம் என்ன, நதி மூலம் என்று திரும்பி பார்த்தால், பிரதான எதிர்க்கட்சியின் அ.தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி. மாநிலங்களவையில் பிரச்னை வருகிற போது (அப்போது எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்புக் குரல் எழுப்ப, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்ந்து பேசியபடி இருந்தார்) அதை ஆதரித்தது உங்கள் ராஜ்யசபா உறுப்பினர் தான். அவர் ஆதரித்தது தான் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்துக்கு மூல முதல் காரணம்.


நீங்கள் தான் அதை ஆரம்பித்தீர்கள் (அப்போது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் எழுந்து மீண்டும் கூச்சலிட சபாநாயகர் அமைதிப்படுத்தினார்) உங்களின் (அ.தி.மு.க.,) உறுப்பினர் குற்றம் சொல்லும் போது அதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்பது எனது கடமை.


மத்திய அரசு இதை கொண்டு வந்து அதை ஒத்துக் கொள்ளாமல் தமிழக அரசு இருந்திருக்கிறது. ஏலத்தை கொடுத்த போது அதை எதிர்த்தது தமிழக அரசு. எல்லா வழிகளிலும் நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோம்.


அதன் பின்னர் தான் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தோம். இங்கு பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அரசியல் ஆதாயம் செய்து குளிர்காய விரும்புகிறீர்கள் (அப்போது அ.தி.மு.க., உறுப்பினர்கள் கூக்குரல் எழுப்ப, சபாநாயகர் அமைதியாக இருக்கும் படி கூறுகிறார்)


தொடர்ந்து கூச்சலிட்டதால் முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டார். அப்போது அவர் பேசியதாவது;


நீங்கள் (அ.தி.மு.க.,) தீர்மானத்தை ஆதரித்தீர்கள், அதற்காக நன்றி சொல்கிறோம், மறுக்கவில்லை. ஆனால் இதே பிரச்னையை உங்கள் உறுப்பினர் பேசும்போது, ஆட்சிக்கு மக்களிடத்தில் இடத்தில் நம்பிக்கை குறைந்து கொண்டு இருக்கிறது என்று எல்லாம் பேசினார். அதனால் தான் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இருக்கிறது என்று பேசினார்.


ராஜ்யசபாவில் உங்கள் உறுப்பினர் என்ன பேசினார். அது தான் இங்கே கேள்வி. அதைத் தான் அமைச்சர் இங்கே கூறுகிறார். நீங்கள் ஆதரித்ததை இல்லை என்று சொல்கிறீர்களா? பேசவில்லை என்று கூறுகிறார்களா? ஆதாரத்துடன் நான் சபாநாயகருக்கு பேசுகிறேன், நீங்கள் உங்கள் ஆதாரத்தை தாருங்கள், ஒரு முடிவு எடுக்கலாம்.


உங்கள் ராஜ்ய சபா உறுப்பினர் தம்பிதுரை அவையில் (ராஜ்யசபா) அதை ஆதரித்து பேசியிருக்கிறார். அதுதான் உண்மை. இல்லை என்று மறுக்கிறீர்களா? என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு தமது பதிலை தொடர்ந்தார். அவர் பேசியதாவது;


அரியவகை கனிம வகைகள் என்று மாநில அரசின் உரிமையை மீறி மத்திய அரசு எடுத்துக் கொண்ட போது அதை நீங்கள் (அ.தி.மு.க.,) ஆதரித்ததன் விளைவுதான் டங்ஸ்டன் விவகாரமாக வந்திருக்கிறது. மத்திய அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூறாமல், தமிழகத்தை குறை கூறுகிறீர்கள் என்றால் யாருடன் கூட்டணி வைத்து நீங்கள் இயங்கி கொண்டிருக்கிறீர்கள்.


தமிழக அரசு ஒருபோதும் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்காது, வரவே விடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் முதல்வர் முதல்வராக பதவியில் இருக்கும் வகையில் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்.


இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.


சட்டசபையில் நடைபெற்ற இந்த விவாதத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு எந்த இடத்திலும் அ.தி.மு.க., எம்.பி. தம்பிதுரையின் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை. அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு பதில் கூறும் போது அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை என்று பெயர் குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement