ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் உரிமை கோரப்படாத ரூ.22,237 கோடி: காரணம் என்னவாக இருக்கும்!

14


மும்பை: வாரிசுதாரர்கள் முன் வராதது, வாரிசுதாரர்களை அடையாளம் காண முடியாதது உள்ளிட்ட காரணங்களால் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில், ரூ.22,237 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.

ஆயுள் காப்பீடு வழங்கும் நிறுவனங்களில், வாரிசுதாரர்களால் உரிமை கோரப்படாத தொகை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உரிமை கோரப்படாத தொகை என்பது, பாலிசிதாரர்கள் அல்லது வாரிசுதாரர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்த நிறுவனம் தர வேண்டிய நிலுவைப் பணமாகும். பாலிசி முடிந்து, 6 மாதங்களுக்கும் மேலாக உரிமை கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்படாத எந்த ஒரு தொகையும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினரால் உரிமை கோரப்படாத தொகையைாகக் கருதப்படும்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில், தற்போது வரை ரூ.22,237 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளன. கடந்த ஆறு மாத காலமாக உரிமை கோரப்படாத தொகையை உரியவர்களுக்கு ஒப்படைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக 1018 கோடி ரூபாய் நிலுவை குறைக்கப்பட்டுள்ளது.


உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதற்கு, விழிப்புணர்வு இல்லாதது, வாரிசாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஏதும் தெரியாமல் இருப்பது காரணமாக கருதப்படுகிறது.
இது குறித்து, ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கூறியதாவது: உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இது ஒரு தொழில்துறையாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்னை. உறவினர் அல்லாத ஒருவரை வாரிசாக நியமனம் செய்து வைத்திருந்தால், ஒரு தார்மீக ஆபத்தை உருவாக்குகிறது. ஒருவர் தனது காதலியை வாரிசாக நியமித்து இருந்தால் அவர் பணத்தை பெறலாம்.

அதேநேரத்தில் அவரது மனைவி அல்லது குழந்தைகள் போன்றவர்கள் உரிமை கோரினால், சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு நபர் தனது குடும்ப உறுப்பினர்கள் இல்லாதவர்களை வாரிசாக நியமிக்கும் போது சவால்கள் ஏற்படுகிறது. இதனால் மக்கள் விழிப்புணர்வு உடன் செயல்படுமாறு, காப்பீட்டு நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.எல்.ஐ.சி., நிறுவனம் பாலிசிதாரர்களை, தங்கள் குடும்ப உறுப்பினர்களை மட்டுமே வாரிசுதாரராக நியமிக்கும்படி அறிவுறுத்துகிறது.

இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அவர்களுடைய உரிய வலைத்தளங்களில் உரிமைக் கோரப்படாத காப்பீட்டுப் பணத்தை பற்றிய முழு விவரங்களை வெளியிடுமாறு தௌிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பாலிசி கிளைம் சார்ந்த விவரங்களை, வாரிசுதாரர்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே உரிமை கோரப்படாமல் இருக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement