பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்; துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

23

சென்னை: சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை அருகில் உள்ள டி.யு.சி.எஸ்., ரேஷன் கடையில் இன்று (ஜன.,09) காலை முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை, துவக்கி வைத்தார்.


தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. கிலோ பச்சரிசிக்கு 35.20 ரூபாய், சர்க்கரைக்கு 42.84 ரூபாய், கரும்புக்கு 35 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, மொத்தம் 249.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பச்சரிசி, சர்க்கரையை தமிழக நுகர்பொருள் வாணிப கழகமும்; கரும்பை கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்தன. அவை, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. பொங்கல் தொகுப்பை வாங்க ஒரே சமயத்தில் கூட்டமாக வருவதை தடுக்க, எந்த தேதி, நேரம் கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய 'டோக்கன்'கள், வீடுகளில் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை அருகில் உள்ள டி.யு.சி.எஸ்., ரேஷன் கடையில் இன்று (ஜன.,09) காலை முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை, துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

Advertisement