இந்தியாவிலேயே பெண்களுக்கான சிறந்த நகரங்கள்; 'டாப்' 10 பட்டியல் இதோ!

28


புதுடில்லி: கடந்த 2024ம் ஆண்டில் இந்தியாவிலேயே பெண்களுக்கான 10 சிறந்த நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டில் முதலிடத்தில் இருந்த சென்னை, தற்போது இரண்டாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது.


தனியார் நிறுவனமான அவதார் குழுமத்தின் சார்பில், 2024ம் ஆண்டில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்கள் அளித்த மதிப்பெண்களின்படி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு சாதகமான, பாதுகாப்பான சூழல் ஆகியவற்றின் அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில் அவதார் குழுமம் நாடு முழுவதும் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. அதன் படி வெளியிடப்பட்ட டாப் 10 நகரங்கள் பட்டியல் பின்வருமாறு:


1. பெங்களூரு, கர்நாடகா


2. சென்னை, தமிழகம்


3. மும்பை, மஹாராஷ்டிரா


4. ஹைதராபாத், தெலுங்கானா


5. புனே, மஹாராஷ்டிரா


6. கோல்கட்டா, மேற்கு வங்கம்


7. ஆமதாபாத், குஜராத்


8. புதுடில்லி


9. குருகிராம், ஹரியானா

10. கோவை, தமிழகம்

இது குறித்து அவதார் குழுமத்தின் தலைவர் சவுந்தர்யா ராஜேஷ் கூறியதாவது:
2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடு என்ற நமது கனவை நனவாக்க, இந்திய பெண்கள் ஆண்களுக்கு இணையாக வெற்றிபெற வேண்டும். பாதுகாப்பான தெருக்கள், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் சிறப்பாக இருக்க வேண்டும். பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம். பெண்கள் தலைமையிலான திட்டங்களில் அதிக முதலீடு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.



பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் 2023ம் ஆண்டில் சென்னை முதலிடத்தில் இருந்தது. அரசு தரப்பில் அதை பெருமிதமாக அவ்வப்போது குறிப்பிட்டும் வந்தனர். தற்போது சென்னையை பின்தள்ளி பெங்களூரு முதலிடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்போது வெளியாகியுள்ள பட்டியலில், வாழ்க்கைத் தரம் குறித்த தரவரிசையில், நாட்டின் முதலிடத்தில் கோவை நகரமும், இரண்டாம் இடத்தில் புனே நகரமும், மூன்றாம் இடத்தில் சென்னையும் உள்ளன.

Advertisement