காங்., மூத்த நிர்வாகி தற்கொலை வழக்கில் திருப்பம்; கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு
வயநாடு: கேரளாவில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அக்கட்சியைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கிய வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் என்.எம்.விஜயன் கடந்த டிச., 27ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் ஜிதேஷூம் உயிரை மாய்த்துக் கொண்டார்.
விஜயனின் தற்கொலைக்கு காங்கிரஸ் கட்சியும், அதில் உள்ள நிர்வாகிகளுமே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தற்கொலைக்கு முன்பாக, விஜயன் எழுதிய கடிதமும் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
அந்தக் கடிதத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொடுத்ததாகவும், ஆனால், சொன்னபடி, வேலையையும் பெற்றுத் தரவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய வயநாடு போலீசார், தற்கொலை செய்து கொண்ட என்.எம்.விஜயன் உள்பட 5 காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, சுல்தான் பதேரி எம்.எல்.ஏ., ஐ.சி.பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் என்.டி.அப்பச்சன், மறைந்த முன்னாள் மாவட்ட தலைவர் பி.வி. பாலச்சந்திரன், காங்கிரஸ் நிர்வாகி கே.கே.கோபிநாதன் ஆகியோர் மீது மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கேரளா காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.