பயங்கரவாதிகள் இருக்கும் ஜெயிலுக்குள் கிடந்த சீனா டிரோன்: போபாலில் உச்சக்கட்ட பதற்றம்
போபால்: மத்திய பிரதேசத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ள போபால் மத்திய ஜெயிலுக்குள் சீன தயாரிப்பு டிரோன் ஒன்று கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள மிகவும் பரபரப்பான ஜெயில்களில் போபால் மத்திய ஜெயிலும் ஒன்றாகும். நேற்று (ஜன.,08) மாலை வழக்கம் போல, ஜெயில் காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கேங்ஸ்டர்கள் மற்றும் பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறையின் அருகே உள்ள வராண்டாவில் டிரோன் ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயில் காவலர்கள், உடனடியாக சீனியர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, ஜெயில் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று டிரோன் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதில் சீன தயாரிப்பைச் சேர்ந்த இலகுரக டிரோனில் 2 லென்ஸூகள் இருந்தன. தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு, இந்த டிரோன் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போபால் மத்திய சிறையில், சிமி, இஸ்ப்-உத் தகிரிர், பி.எப்.ஐ., ஐ.எஸ்.ஐ.எஸ்., மற்றும் ஜமாத் உல் முஜாஹிதின் வங்கதேசம் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தினம் நெருங்கி வைரும் நிலையில், இந்த சிறையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சூழலில், மர்மமான முறையில் டிரோன் கிடந்திருப்பதை போலீசார் எச்சரிக்கை மணியாகவே பார்க்கின்றனர்.