அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சி.பி.ஐ., விசாரணை கோரும் பா.ஜ.,
சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
பா.ஜ.,வின் மையக்குழு கூட்டத்திற்கு பின் நிருபர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது: அண்ணா பல்கலை மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மீது நம்பிக்கையில்லை. மாநில அரசின் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மாநில அரசின் கையாளாகாததனத்திற்கு எதிராக பெண்கள் போராடினால், அவர்களையும் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். போராடுவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் அனுமதி உள்ளது. அவற்றை புறந்தள்ளி கைது செய்து அடக்குமுறையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பெண்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளது. எதிர்க்கட்சிகளின் குரல்வளை ஏன் நசுக்கப்படுகிறது. அமுக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட குரல் எழுப்புவதற்கு அனுமதி மறுக்கிறீர்கள். இங்கு என்ன ஜனநாயகம் இருக்கிறது. அவசர நிலை போல் அனைவரின் குரல்வளை நெரிக்கப்படுவது ஏன்?
முதல்வர் இந்த விவகாரத்தை மென்மையாக கையாள்கிறார். தமிழக அரசு மீது பெண்கள் நம்பிக்கை இழந்து கொண்டு உள்ளனர்.
தி.மு.க., நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள். யாரையும் கைது செய்யாதது ஏன்? தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்தினால் பாதிக்கப்படுமா? இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு தமிழிசை கூறினார்.
பொறுப்பேற்க வேண்டும்
பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியதாவது: சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் பேசும் போது, கைது செய்யப்பட்டவர் எங்கள் கட்சி அனுதாபி எனக்கூறியுள்ளார். வழக்கு தொடர்பு இல்லாத விஷயங்களை சேர்க்கிறார். பொள்ளாச்சி விஷயத்தை பற்றி பேசுகிறார். உங்களைத் தான் மக்கள் ஆட்சி அமைக்க அதிகாரம் கொடுத்து உள்ளார்கள். தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு செய்து உள்ளீர்களா எனக் கூறுவதை விட்டுவிட்டு, முன்பு ஆட்சியில் இருந்த கட்சி செயல்பாட்டை பற்றி அதிகளவில் பேசுகிறார். எப்.ஐ.ஆர்., விஷயத்தில் மத்திய அரசை குறை கூறினார். ஒரு சில அமைச்சர்கள் கவர்னர் மீது புகார் சொல்கின்றனர். பல்கலை வளாகத்தில் நடந்ததால் கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றால், பொது வெளியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு முதல்வர் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.