என்னால் அப்படியிருக்க முடியாது...

17




சென்னை புத்தகக் காட்சியில் பல்வேறு ஆளுமைகள் பேசுகின்றனர்,பேசிவருகின்றனர்.

அவர்களில் ஒருவராக சுகி.சிவம் பேசும்போது கொஞ்சம் கோபமும் வேகமும் கொண்டு பொங்கினார்.

நீ ராமாயணம்,மகாபாரதம் என்றுதானே பேசிக்கொண்டு இருந்தாய்,பட்டு சால்வை,பணமுடிப்பு, பரிசு என்று வாங்கிக் கொண்டு சுகமாகத்தானே இருந்தாய்,திடீரென ஏன் அரசியல் பேசுகிறாய்? என்று இப்போது என்னைப் பார்த்து கேட்கின்றனர்.

அம்பேத்கார் பற்றி பேசினால் அரசியலா? நான் அம்பேத்கார் பற்றி பேசினால் பலருக்கு ஏன் வயிறு எரிகிறது என்றே தெரியவில்லை.உருப்படியாய் ஒரு மனுதர்மம் இருந்தால் அவர் ஏன் அதை எரிக்கப் போகிறார்.

அவரைப் பற்றி பேசுவது அரசியல் என்றால் எனது பேச்சு அரசியலாகவே இருந்துவிட்டு போகட்டும்.

நான் அங்கே பொட்டி வாங்கிவிட்டேன், இங்கே பொட்டி வாங்கிவிட்டேன் என்றெல்லாம் சொல்கிறார்கள், எங்கேயும் பெட்டி வாங்குமளவிற்கு நான் ஏழை இல்லை, யாருடைய காசுக்கும் நான் ஆசைப்படுவது இல்லை, எனது காசு யாரிடம் இருந்தாலும் விடுவதுமில்லை.
Latest Tamil News
நான் எனது கருத்தை சொல்கிறேன் அதில் எனது எல்லை எது என்றும் தெரிந்துவைத்துக் கொண்டுதான் சொல்கிறேன்.ஆப்கானிஸ்தானில் பெண்கள் இருக்கும் வீட்டிற்கு ஜன்னல் இருக்கக்கூடாது என்று சட்டம் போட்டுள்ளார்களாம் படித்துவிட்டு வருத்தப்பட்டேன் அது அவர்களது பிரச்னை அதில் நான் கருத்து எதுவும் சொல்வதற்கில்லை.

நேரு மீது பழிவாரி துாற்றுகிறார்கள் ஆனால் அவர் பதவி ஏற்றபோது மதக்கலவரம்,பிரிவினை என்று ஊரே ரத்த பூமியாக இருந்தது,அந்த நேரத்தில் பதவி வகித்து முடிந்த வரை நிர்வாகம் செய்ததுதான் பெரிதே தவிர, எல்லாம் சரியாக இருக்கும் போது நான்தான் சரி செய்தேன் என்பது சரியில்லை.

சர்தார் பட்டேல் இரும்பு மனிதர்தான் சந்தேகமில்லை ஆனால் அவரை விட அதிகம் உறுதியும் திறமையும் கொண்டவர் நம்மிடையே முதல்வராக இருந்திருக்கிறார் யார் தெரியுமா?ஒமந்துாரார்தான் அவர்.

நாடு முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோதும் ஹைதராபாத் நிஜாம் மட்டும் முறுக்கிக்கொண்டு இருந்தார், அவரை வழிக்கு கொண்டு வரமுடியாமல் பட்டேலே திணறினார் அந்த சமயத்தில்தான் ஒமந்துாரர் நான் உதவட்டுமா? எவ்வளவு ஆயுதம் வேண்டும்? எத்தனை பேர் கொண்ட படைபலம் வேண்டும்? என்று கேட்டு தன்னிடம் உள்ள பலத்தை அவருக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட, அதன்பிறகே நிஜாமை தைரியமாக எதிர்த்து வழிக்கு கொண்டு வந்தார் பட்டேல்,அந்த வரலாறு எல்லாம் இங்கே புத்தகமாகவே இருக்கிறது படித்துப் பாருங்கள்.

'கற்க கற்றபின் நிற்க தக'என்றார் வள்ளுவர் நாம் நிறைய கற்கிறோம் ஆனால் கற்றபடி நடக்கிறோமா? என்றால் இல்லை என்றே வருத்தத்துடன் கூறவேண்டியுள்ளது, இதற்கு அவரையும் இவரையும் சாட்சிக்கு கூப்பிடவேண்டியது இல்லை உங்கள் மனசாட்சியே போதும்...

-எல்.முருகராஜ்

Advertisement