யார் அந்த சார்...? இப்ப கேலியா போயிடுச்சு; சீமான் வேதனை

18


கடலூர்: அண்ணா பல்கலை சம்பவத்தை திசைதிருப்புவதற்கும், தப்பிப்பதற்கும் தான் கவர்னரை எதிர்த்து தி.மு.க., போராட்டம் நடத்தியதாக நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.


வடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அண்ணா பல்கலை விவகாரத்தில் 'யார் அந்த சார்' என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர் பதிலளித்ததாவது: அண்ணா பல்கலை வன்கொடுமை சம்பவத்தில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால், எட்டப்படுமா? என்பது தான் கேள்வி. ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையை, புது பிரச்னையை வந்தால் மறக்கடிக்கப்படுகிறது. அப்படித்தான், ஸ்ரீமதி மரண வழக்கு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் மறக்கக்கடிக்கப்பட்டு விட்டன.


பாதிக்கப்பட்ட மாணவியின் எப்.ஐ.ஆர்., குறித்த விபரங்களை சமூக வலைதளங்களில் கசிய விட்டு விட்டனர். யார் அந்த சார் என்பதை, குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் விசாரித்தால் தெரிய வரப்போகிறது. ஆனால், அந்த நபர் குறித்த எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.


தற்போது, யார் அந்த சார், யார் அந்த சார் என்பது கேலியாகவும், நகைச்சுவையாகவும் ஆகி விட்டது. வலியையும், வேதனையையும் மறந்திட்டு, கடந்து போவதைப் போல் தெரிகிறது. இப்போது, மதுரையில் டங்ஸ்டனுக்கு எதிராக மக்கள் போராட்டம், கவர்னருக்கு எதிராக தி.மு.க., போராட்டம் நடத்துறாங்க.


கவர்னரை எதிர்த்து நாங்க தான் போராட்டம் நடத்த வேண்டும். அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் நீங்கள் ஏன் போராடுகிறீர்கள். 40 எம்.பி.,க்களை வைத்திருக்கும் நீங்கள், பார்லிமென்ட்டில் கவர்னருக்கு எதிராக பேச வேண்டியது தானே. அதை விட்டு விட்டு போராட்டம் ஏன்? போராட்டம் நடத்துறதே, இந்த விவகாரத்தை திசைதிருப்புவதற்கும், தப்பிப்பதற்கும் தானே. மத்திய குழு விசாரணையில் முன்னேற்றம் இல்லை.


முதலில் ரூ.5,000 பொங்கல் என்றார்கள். அப்புறம், ரூ.2,500 என்றார்கள். அப்புறம் ரூ.1,000 என்றார்கள். தற்போது, 103 ரூபாயுக்கு வந்திருக்கு. வெறும் 3 ரூபாயிக்கு வருவதற்குள் நாங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நெற்றியில் ஒத்தை ரூபாயை வைத்து புதைத்து விட்டு சென்று விடுவார்கள்.


அண்ணா பல்கலை சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கழித்து, சட்டசபையில் முதல்வர் கொடூரம் என்று கூறியது தான் பெருங்கொடூரம். கொடூரம் என்று தெரியும் போது, போராடுபவர்களை கைது செய்தது ஏன்? நீங்கள், கவர்னரை எதிர்த்து எங்க வேண்டுமானாலும் போராட்டம் நடத்தாலாமா?, இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement