யு.ஜி.சி., வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு; சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

21


சென்னை: யு.ஜி.சி., வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபைக்கு முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பல்கலை துணை வேந்தர் தேடல் குழுவில், மாநில அரசு பிரதிநிதியை நீக்கி, புதிய விதிமுறைகளை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வகுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாநில அரசின் பல்கலைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைப்பது கெடு நோக்கம் கொண்டது; கல்வி தொடர்பான அதிகாரங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இருக்க வேண்டும்.


புதிய விதிகளுக்கு எதிராக தேவையென்றால் கோர்ட்டை நாடுவோம்; கல்வி, மக்கள் மற்றும் எதிர்கால தலைமுறையைக் காக்க இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தன்னிச்சையாக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரங்களை கவர்னருக்கு வழங்குவது சரி அல்ல. மாநில உரிமைகளில் தலையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் செயல். மாநில அரசு தங்கள் சொந்த பணத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களை அபகரிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும். மத்திய அரசு கல்வித்துறையில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு புரட்சி பாரதம், த.வா.க., கொ.ம.தே.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பின்னர் சட்டசபையில் யு.ஜி.சி., வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா.ஜ., வெளிநடப்பு



யு.ஜி.சி., புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் கூறியதாவது: யு.ஜி.சி., புதிய வரைவு தொடர்பான முதல்வரின் தீர்மானத்தை பா.ஜ., எதிர்க்கிறது என்றார்.

Advertisement