ஆரம்பமே கண்ணக்கட்டுதே! என்ன நடக்குது விஜய் கட்சியில்..?: ஆதங்கப்படும் ஆலோசகர்; ஆடியோ வைரல்
சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கி அரசியலில் கால் பதித்த நடிகர் விஜய்க்கு பக்கபலமாக இருப்பது ஆனந்த். த.வெ.க.,வில் ஆக்டிவாக காட்டிக்கொள்ளும் அவரை சுற்றியே தொண்டர்கள் (முன்பு ரசிகர்களாக இருந்தவர்கள்) மொய்த்துக்கொண்டு இருக்கின்றனர். அக்டோபர் மாதம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்திய நடிகர் விஜய், அதன்பிறகு எந்தவொரு அரசியல் நிகழ்விலும் வெளியே தலைக்காட்டவில்லை.
தலைவர்களின் பிறந்தநாளுக்கு வீட்டிலேயே புகைப்படத்திற்கு மரியாதை செய்வது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்திக்காமல், அங்குள்ளவர்களை தனது பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து நலத்திட்டங்களை வழங்கியது என எல்லாமே விஜய்க்கு விமர்சனங்களையே பெற்றுத்தந்தது.
ஜான் ஆரோக்கியசாமி
பொது இடங்களுக்கு நேரடியாக சென்றால் ரசிகர்களின் கூட்டம் அதிகமாகிவிடும் என்பதால் இப்படி செய்வதாக கட்சியினர் 'முட்டுக்கொடுத்தாலும்', அரசியலுக்கு வந்துவிட்டால் மக்களை நேரடியாக சந்தித்தே ஆக வேண்டும், மக்களுக்காகவே நிற்க வேண்டும் என்பதை புரிய மறுக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, விஜய் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார் ஜான் ஆரோக்கியசாமி என்பவர். இவர் இதற்கு முன்பு, 2016 சட்டசபைத் தேர்தலின்போது, பாமக.,வுக்கு ஆலோசகராக இருந்து, 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்கிற பிராண்டிங், பா.ம.க.,வை திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக முன்னிலைப்படுத்தினார்.
தவெக ஒப்பந்தம்
அன்புமணியை முதல்வர் வேட்பாளராகப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தினார். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் 'மவுசு' இருக்கிறது. 2019ல் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வியூக வகுப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார். அந்தத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. அப்படிப்பட்ட ஜான் ஆரோக்கியசாமியை, த.வெ.க ஒப்பந்தம் செய்திருந்தது. அவரின் அறிவுரைகளையும், செயல்பாடுகளையும் விஜய் கேட்டு வந்தார்.
இந்த நிலையில், ஜான் ஆரோக்கியசாமி, த.வெ.க நிர்வாகி ஒருவரிடம் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில், ஆனந்த் மீது ஏராளமான புகார்களை அடுக்கியதுடன், த.வெ.க 2 சதவீத ஓட்டுக்கூட தாண்டாது என்றும் கூறியுள்ளார்.
கட்சியின் முகம்
அவர் பேசியதாவது: விஜய் தான் கட்சியின் 'முகம்'. ஆனால் கட்சியின் எந்த நிகழ்ச்சி போஸ்டர்களிலும் ஆனந்த் புகைப்படம் தான் பெரிதாக இருக்கிறது. அவர் அங்கீகரிக்காமல் ஒரு புள்ளிக்கூட வைக்க முடியாது. விஜயை அமுக்கிவிட்டு அவர் பெரிதளவில் காட்டிக்கொள்கிறார். ஸ்டாலினை விட துரைமுருகனையோ, ஜெயலலிதாவை விட சசிகலாவையோ பெரிதுப்படுத்தி மக்களிடம் கொண்டுசென்றால் கட்சி என்னவாகும்? அதுபோல தான். எல்லா கட்சியிலும் முதல்வர் வேட்பாளரோ, கட்சியின் தலைவரோ தான் முன்னிலை.
2 சதவீதம்
விஜய்யே பிறந்தநாள் கொண்டாடவில்லை, ஆனால் இவர் (ஆனந்த்) பிறந்தநாள் கொண்டாடுகிறார். நான் ராமதாஸையே (பாமக நிறுவனர்) வெளியே போட்டவன். முதல்வர் வேட்பாளர் அன்புமணி என்றால் அவர்தான் இருக்க வேண்டும். நான் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, அண்ணாதுரைக்கு நிகராக விஜயை காண்பிக்க முற்படுகிறேன். ஆனால் கோமாளிக்கூட்டங்களை எல்லாம் உள்ளே கொண்டு வருகிறார். இது பெரிய தப்பு. இப்படியே போச்சுனா 2 சதவீதம் கூட தேறாது.
முதல்வர் வேட்பாளர் முகத்தை நீர்த்துப்போக செய்யக்கூடாது. அவரது இடத்தை ஆக்கிரமிக்க கூடாது. திமுக, அதிமுக.,வை விடுங்க, லெட்டர் பேட் கட்சிகளில் கூட இதெல்லாம் விட மாட்டார்கள். ஜெயலலிதா, கருணாநிதி, அண்ணாதுரை, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை பார்த்துதான் ஓட்டுப்போடுகின்றனர். இதுபோல அனைவருக்கும் நடுநிலையானவர் யாரோ அவரை தான் முன்னிலைப்படுத்த வேண்டும். இதனால் தான் இபிஎஸ் காலியானார். இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா, அன்புமணி, திருமாவளவன் என யாரையும் இப்படி முன்னிலைப்படுத்த முடியாது.
ஆனால், தவெக.,வில் முன்னிலைப்படுத்த வேண்டிய விஜயை விட ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்துகிறார். இவர் தமிழகத்திற்கு என்ன செய்தார்? அவருடைய பிறந்தநாளுக்கு ஏன் தொண்டர்கள் கிடா வெட்டி, ரத்த தானம் கொடுக்கின்றனர்? அப்படியென்றால், விஜயை ஒரு 'முகத்திற்காக' மட்டுமே வைத்துள்ளனர் என்றும், ஆனந்த் தான் எல்லாமே எனவும் நினைக்கின்றனர். கமல் கூட கொள்கை இல்லாமல் 4 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால், இந்த கட்சி 2 சதவீதம் கூட தேறாது. நான் 30 சதவீதத்திற்கு இலக்கு வைத்துள்ளேன். அப்போது தான் கூட்டணி பகிர்வுக்கு வருவார்கள். இப்படியிருந்தால் யார் கூட்டணிக்கு வருவார்கள்?
அப்படியே சொல்லும் விஜய்
விஜயிடம் என்ன சொன்னாலும் அதனை ஆனந்திடம் சொல்லிவிடுகிறார். அவரும் இரவு நேரத்தில் விஜயிடம் இருந்து எப்படி தகவல்களை பெறுவது என்ற பார்முலாவை ஆனந்த் கண்டறிந்துள்ளார். கட்சி விஷயங்கள் பேசுவது போன்று பேசி, எல்லா விஷயங்களையும் விஜயிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார். நான் விஜயிடம் என்ன சொன்னாலும் அப்படியே அவருக்கு தெரிகிறது. அதனால் இனி ஆனந்திடமே நேரடியாக சொல்லிவிடலாம் என முடிவு செய்தேன்.
மாவட்ட தலைவர்களை நியமிப்பது தொடர்பாகவும் ஆனந்த் தலையிடுகிறார். விஜய் வேண்டாம், தவறாக போய்விடும் என சொன்னாலும், வேட்பாளர்களை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுங்கள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறிவிடுகிறார். நீங்கள் (கட்சி நிர்வாகி) வேட்பாளராக இருந்தாலும், ஆனந்த் சொன்னால் தான் உங்களுக்காக கட்சி வேலை செய்வார்கள். இந்த மாதிரியான கட்சிக்குள் நிலவும் அரசியல் நெருங்கி வரவர, தாங்க முடியாத அளவிற்கு சென்றுவிடும். இவ்வாறு அவர் ஆடியோவில் பேசியுள்ளார்.
கட்சி துவங்கி, மாநாடு மட்டுமே நடத்திய நிலையில், இன்னும் மக்களை நேரடியாக சந்திக்காமல், இடைத்தேர்தலை கூட சந்திக்காமல், நேரடியாக 2026 சட்டசபை தேர்தலில் குதிக்க நினைக்கும் விஜய் கட்சிக்கு, திட்டங்களை எல்லாம் வகுத்துக்கொடுக்கும் ஆலோசகரே இப்படி பகிரங்கமான குற்றச்சாட்டுகளை அடுக்குவதால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.