தமிழக பவுலர்கள் ஏமாற்றம்: 'கூச் பெஹர் டிராபி' பைனலில்
ஆமதாபாத்: 'கூச் பெஹர் டிராபி' பைனலில் தமிழக பவுலர்கள் ஏமாற்ற, குஜராத் அணி முதல் இன்னிங்சில் 380 ரன் குவித்தது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான 'கூச் பெஹர் டிராபி' தொடர் நடக்கிறது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கும் பைனலில் தமிழகம், குஜராத் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 287/7 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் காவ்யா படேல் (57*) அரைசதம் கடந்து கைகொடுத்தார். குஜராத் அணி முதல் இன்னிங்சில் 380 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் பிரவின் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு ஸ்ரேனிக் (37), ராகவ் (27) சுமாரான துவக்கம் கொடுத்தனர். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 75 ரன் எடுத்திருந்தது. கிஷோர் (6), அக்சய் (5) அவுட்டாகாமல் இருந்தனர். குஜராத் சார்பில் கிலான் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.