டேபிள் டென்னிஸ்: ஹன்சினி 'சாம்பியன்'
வதோதரா: தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் தமிழகத்தின் ஹன்சினி (19 வயது) சாம்பியன் ஆனார்.
குஜராத் மாநிலம் வதோதராவில், மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 86வது சீசன் நடக்கிறது.
யூத் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியான ஹன்சினி, ஹரியானாவின் சுஹானா சைனி மோதினர். அபாரமாக ஆடிய ஹன்சினி 4-2 (1-11, 11-9, 13-11, 11-9, 10-12, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இளம் வயதில் (15) 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையானார்.
ஹன்சினி, 2021ல் 13 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இந்திய யூத் அணியில் (15 வயது) இடம் பெற்றுள்ள இவர், உலக டேபிள் டென்னிஸ் யூத் கன்டென்டர் தொடர்களில் நிறைய தங்கம் வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு சார்பில் 'கேலோ இந்தியா' உதவித்தொகை வழங்கப்பட்டது.