இரண்டாவது சுற்றில் பிரனாய் * மலேசிய பாட்மின்டனில்...
கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்.
மலேசியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையரில் உலகின் 'நம்பர்-26' ஆக உள்ள பிரனாய், 28 வது இடத்திலுள்ள கனடாவின் பிரியன் யங் மோதினர். பிரனாய் 21-12, 6-3 என முன்னிலையில் இருந்த போது, மைதான பிரச்னை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.
நேற்று மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. பிரனாய் இரண்டாவது செட்டை 17-21 என இழந்தார். பின் நடந்த மூன்றாவது, கடைசி செட்டை பிரனாய் 21-15 என வசப்படுத்தினார். முடிவில் பிரனாய் 21-12, 17-21, 21-16 என போராடி வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ராவத், 11-21, 16-21 என சீனாவின் ஷி பெங்கிடம் வீழ்ந்தார்.
மாளவிகா அபாரம்
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் 'யூத்' ஒலிம்பிக் முன்னாள் சாம்பியன், இந்தியாவின் மாளவிகா, 2 முறை ஜூனியர் உலக சாம்பியன் ஆன, மலேசியாவின் ஜின் வெய் மோதினர். இதில் மாளவிகா, 21-15, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் களமிறங்கிய சாத்வித்சாய்ராஜ், சிராக் ஜோடி, முதல் சுற்றில் தைவானின் மிங் சே, டங் வெய் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-10, 16-21, 21-5 என வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ருதுபர்ணா, ஸ்வேதா பர்ணா ஜோடி, அஷ்வினி, தனிஷா ஜோடி தோல்வியடைந்தன.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் தனிஷா, கபிலா ஜோடி, கருணாகரன், வரியாத் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றன.