சாம்பியன்ஸ் டிராபி: ஜெய்ஸ்வால் வாய்ப்பு

1

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி அணியில் ஜெய்ஸ்வால் இடம் பெற உள்ளார். ராகுல், ஜடேஜா, முகமது ஷமி இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது.
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள அணிகள் மட்டும் மோத உள்ளன. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள், பாதுகாப்பு காரணங்களுக்கான துபாயில் நடக்க உள்ளன. பிப். 20ல் தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சமீபத்திய போட்டிகளில் 'பார்ம்' இல்லாமல் தவிக்கும் கேப்டன் ரோகித் சர்மா, 'சீனியர்' கோலி, அணியில் தொடர உள்ளனர். 'டி-20', டெஸ்ட் அரங்கில் அசத்தும் ஜெய்ஸ்வால், முதன் முறையாக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட காத்திருக்கிறார்.
ரிஷாப் வருகை
விக்கெட் கீப்பர் பேட்டராக ரிஷாப் பன்ட் இடம் பெறுவது உறுதி என்பதால், ராகுல் நிலை கேள்விக்குறியாக உள்ளது. 2023 உலக கோப்பை பைனலில் 106 பந்தில் 66 ரன் (எதிர்-ஆஸி.,) மட்டும் எடுத்து, அணியின் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
இஷான் கிஷான் உள்ளூர் தொடரில் ஜொலிக்கவில்லை. சஞ்சு சாம்சன், பயிற்சியாளர் காம்பிரின் நேரடி தேர்வாக இருப்பார்.
ஜடேஜா சந்தேகம்
பந்துவீச்சில் காயத்தில் இருந்து மீண்டால் பும்ரா, தவிர சிராஜ், அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவர். முகமது ஷமி 'பிட்னஸ்' குறித்து சரியாக தெரியவில்லை என்பதால் அணியில் இடம் பெறுவாரா என பொறுத்திருந்து காணலாம்.
2023 உலக கோப்பை பைனலுக்குப் பின் இந்தியா பங்கேற்ற 6 ஒருநாள் போட்டியிலும் 'சுழல்' ஜடேஜா சேர்க்கப்படவில்லை. இவரை விட, ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் கைகொடுக்கும் அக்சர் படேல் வாய்ப்பை தட்டிச் செல்வார். குல்தீப் உடற்தகுதி பெறாத பட்சத்தில் வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிதிஷ் குமார் சவால் தரலாம். திலக் வர்மா, ரிங்கு சிங், 'ரிசர்வ்' பேட்டர்களாக இந்திய அணியில் இடம் பெறலாம்.

உத்தேச அணி
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், கோலி, ராகுல், ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி/ரவி பிஷனோய், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்/முகமது ஷமி, ரிங்கு சிங்/திலக் வர்மா.

Advertisement