இலவசமா அல்லது சிறந்த வசதி வேண்டுமா: முடிவு மக்கள் கையி்ல் என்கிறார் நிதி கமிஷன் தலைவர்
பனாஜி: இலவசங்கள் வேண்டுமா அல்லது சிறந்த சாலைகள், மேம்பட்ட குடிநீர் வசதி, தரமான பாதாள சாக்கடை திட்டம் வேண்டுமா என்பதை குடிமக்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என பொருளாதார நிபுணரும், 16வது நிதிக்குழு தலைவருமான அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார்.
நிதிக்குழுவினர் கோவா மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர். பிறகு அரவிந்த் பனகாரியா நிருபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பல மாநில அரசுகள் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியை இலவச திட்டங்களுக்கு பயன்படுத்துவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில்: ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டால், அந்த நிதி அதற்கு தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவை நிதிக்கமிஷன் எடுக்க முடியாது. பொருளாதார ஸ்திரத்தன்மையை மனதில் வைத்து வேண்டுமானால், கேள்வி எழுப்பலாம். பொதுவாக எதுவும் கூறலாம். ஆனால், எதற்கு செலவு செய்ய வேண்டும் என மாநில அரசுகள் முடிவு எடுப்பதை கட்டுப்படுத்த முடியாது. இலவசங்களை அறிவித்த மாநில அரசுகளை மக்கள் தேர்வு செய்தால் அவர்களிடம் மக்கள் கேள்வி கேட்கலாம். ஆனால், சிறந்த வசதிகள், தரமான சாலைகள், மேம்பட்ட பாதாள சாக்கடை வசதிகள் வேண்டுமா அல்லது உங்கள் வங்கிக்கணக்கிற்கு வந்து சேரும் இலவசங்கள் வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.