மார்டின் கப்டில் வருத்தம்
ஆக்லாந்து: நியூசிலாந்து துவக்க வீரர் மார்டின் கப்டில் 38. கடந்த 2009ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2015ல் வெலிங்டனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் 237 ரன் விளாசினார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் நியூசிலாந்து வீரரானார். சிறந்த பீல்டரான கப்டில், 2019ல் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் இந்திய கேப்டன் தோனியை 'ரன்-அவுட்' செய்தார்.
கடைசியாக 2022ல் (அக். 12) கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 'டி-20' போட்டியில் விளையாடிய இவருக்கு, 2023ல் நடந்த உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. 47 டெஸ்ட் (2586 ரன், 3 சதம்), 198 ஒருநாள் (7346 ரன், 18 சதம்), 122 சர்வதேச 'டி-20' போட்டியில் (3531 ரன், 2 சதம்) விளையாடிய கப்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கப்டில் கூறுகையில், ''ஓய்வு பெற்றது வருத்தமாக உள்ளது. நியூசிலாந்து ஜெர்சி, தொப்பி அணிந்து விளையாடியதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்,'' என்றார்.