கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடை; பொதுமக்கள் ஆவேச மறியல்!
கோவை: கோவை உடையாம்பாளையத்தில், கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊர் மக்கள் ஆவேச மறியலில் ஈடுபட்டனர்.
கோவை உடையாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில், வீரமாச்சியம்மன் கோவில் மற்றும் கருப்பராயன் கோவில் உள்ளது. வீரமாச்சியம்மன் கோவில் முன்பு, சில நாட்களுக்கு முன்னர் தள்ளு வண்டியில் ஒருவர் மாட்டுக்கறி பிரியாணிக் கடை போட்டிருந்தார். இதற்கு ஊர் மக்கள் சார்பில் உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'தங்கள் ஊரில், கோவில், பள்ளி அமைந்துள்ள பொது இடத்தில் மாட்டுக்கறி பிரியாணிக்கடை போடக்கூடாது; இது ஊர் கட்டுப்பாடு என்றும், கடையை தள்ளி அமைத்துக்கொள்ளும்படியும்' ஊர் பிரமுகர்கள் வலியுறுத்தினர்.இவ்வாறு வலியுறுத்திய பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணி என்பவருக்கும், மாட்டுக்கறி பிரியாணி கடை போட்டிருந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதே இடத்தில் கடை அமைக்க அனுமதி வேண்டும் என்றும், பாதுகாப்பு வேண்டும் என்றும், மாட்டுக்கறி பிரியாணிக்கடை நடத்திய பெண், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், மாட்டுக்கறி பிரியாணி விற்பனையை தடுத்ததாக சுப்ரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது, 351(2), 126(2), 192, 196 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல் பரவியதும், ஊர் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இன்று மாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடையாம்பாளையம் மக்கள், கோவில் அருகே சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், மாட்டுக்கறி பிரியாணி கடை போட அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியும், தீர்மானம் நிறைவேற்றினர்.
இதற்கிடையே, மறியலில் ஈடுபட்டுள்ள ஊர் மக்களுடன் போலீசார் பேச்சு நடத்தி வருகின்றனர்.