தி.மு.க., எம்.பி., கல்லூரியின் மனு தள்ளுபடி; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவு

சென்னை: தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியின் சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.


வேலுார், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில், தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியில், கடந்த 3ம் தேதி காலை 7:00 மணி முதல், அமலாக்கத் துறை அதிகாரிகள் 15க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.


மொத்தம் 44 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க், சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், கணினிகளை ஆய்வு செய்ய ஒத்துழைக்காததால், சர்வர் அறைக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.


அதோடு, வரும் 22ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு வெளிநாடு சென்றுள்ள எம்.பி., கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


இதனிடையே, சர்வர் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு தேர்வு நடத்தவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு சென்னை ஐகோர்ட்டில் கல்லூரியின் நிர்வாகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கல்லூரி நிர்வாகத்தினர், சோதனையின் போது போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அமலாக்கத்துறை வாதிட்டனர்.


இதனைக் கேட்ட நீதிபதிகள், சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Advertisement