ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
மெல்போர்ன்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இலங்கை செல்ல உள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் ஜன. 29ல் முதல் டெஸ்ட் காலேயில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் காலேயில், பிப். 6-10ல் நடக்கிறது. இத்தொடருக்கான 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
'ரெகுலர்' கேப்டன் பாட் கம்மின்சின் மனைவிக்கு 2வது குழந்தை பிறக்க இருப்பதால், இத்தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்த உள்ளார். காலே ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இளம் சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' கூப்பர் கனோலி 21, புதுமுக வீரராக தேர்வானார். இவரை தவிர மற்ற சுழற்பந்துவீச்சாளர்களான மாத்யூ குனேமன், டாட் மர்பி தேர்வாகினர். இந்தியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டிராபியில் அறிமுகமான நாதன் மெக்ஸ்வீனி, மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
ஆஸி., அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபாட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கனோலி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாத்யூ குனேமன், மார்னஸ் லபுசேன், நாதன் லியான், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.