பொங்கல் பரிசு தொகுப்பு பயனாளிகள் 6.20 லட்சம் பேர்: ரேஷன் கடைகளில் விநியோகம் துவக்கம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 6 லட்சத்து20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.7.01 கோடி மதிப்பீட்டில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்புடன் வேட்டி சேலை வழங்கும் பணியும் நேற்று துவங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள ரேஷன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலையை கலெக்டர் பழனி வழங்கி துவக்கிவைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கி, முதல்வர் துவக்கிவைத்துள்ளார்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 756 குடும்ப அட்டைதாரர்கள், 435 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரத்து 191 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
பொது மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை சிரமமின்றி பெறும் வகையில், கடந்த 3ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வீடு, வீடாக வழங்கப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பணி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 10,11,12 ஆகிய தினங்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு, அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில், டோக்கன் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
இதில், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ம் தேதி பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்.
எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று, தங்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், நகர்மன்ற துணை தலைவர் சித்திக்அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, விழுப்புரம் தாலுகாவில் உள்ள 221 ரேஷன் கடைகள் மற்றும் மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டமிட்டபடி தொடங்கி வழங்கி வருகின்றனர்.