பாகிஸ்தானில் நடக்குமா சாம்பியன்ஸ் டிராபி: மைதான கட்டுமான பணிகள் தாமதம்
புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் மந்தமாக நடக்கின்றன. இதனால், திட்டமிட்டபடி பாகிஸ்தானில் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தானில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் வரும் பிப். 19 - மார்ச் 9ல் நடக்கவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இடம் மாற்றமா: போட்டிகள் பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டியில் நடக்கவுள்ளன. இங்குள்ள மைதானங்களில் கட்டுமானம், மறு சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதை விரைவில் முடித்து, வரும் பிப். 12ம் தேதிக்குள் மைதானத்தை ஐ.சி.சி.,யிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் லாகூர், கராச்சியில் கட்டுமானப்பணிகள் மந்தமாக நடக்கின்றன. குறிப்பிட்ட தேதிக்குள் பணிகள் நிறைவடைவது சந்தேகம். கட்டுமானப் பணிகள் முடியாவிட்டால், போட்டிகள் பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு (யு.ஏ.இ.,) மாற்றப்படலாம்.
பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில்,''சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இன்னும் 40 நாள் தான் உள்ளன. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே மைதான பணிகளை ஐ.சி.சி., குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலும். லாகூர் கடாபி மைதானத்தில் வீரர்கள் 'டிரஸ்சிங் ரூம்' தயாராகவில்லை. சற்றுச்சுவர் கட்ட வேண்டியுள்ளது. அவ்வப்போது வானிலையும் தொல்லை தருகிறது,''என்றார்.
தென் ஆப்ரிக்கா புறக்கணிப்பு
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, பெண்கள் விளையாட்டை தடை செய்தது. தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியை கலைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் ஆப்ரிக்க அணி, பிப். 21ல் கராச்சியில் நடக்கவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள 160க்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை (பிப். 26, லாகூர்) இங்கிலாந்து அணி புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தென் ஆப்ரிக்க விளையாட்டு அமைச்சர் கெய்டன் மெக்கென்சி கூறுகையில், ''அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் போர்டு (2023 நவ. - 2024 ஜன.) கலைக்கப்பட்டது. தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிலும் அரசியல் புதுகுந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும்,'' என்றார்.
வருகிறார் ஷமி
ஒவ்வொரு அணியும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வீரர்களின் உத்தேச பட்டியலை வரும் ஜன. 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க ஐ.சி.சி., அறிவுறுத்தி உள்ளது. இந்திய அணியில் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது. கடைசியாக 2023 உலக கோப்பை பைனலில் பங்கேற்ற ஷமி, வலது கணுக்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். இதிலிருந்து மீண்ட இவர், சையது முஷ்தாக் அலி டிராபியில் ('டி-20') பங்கேற்று 11 விக்கெட் சாய்த்தார். உள்ளூர் போட்டியில் உடற்தகுதியை நிரூபித்த ஷமி, தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறலாம்.
துபாயில் பயிற்சி போட்டி
இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை (பிப். 20, துபாய்) சந்திக்கிறது. இப்போட்டிக்கு முன் இந்திய அணி, துபாயில் ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளது. பாகிஸ்தானில் மைதான கட்டுமானப்பணிகள் தாமதமாவதால், மற்ற அணிகளுக்கான பயிற்சி போட்டிகளை துபாயில் நடத்த ஐ.சி.சி., திட்டமிட்டுள்ளது.
கம்மின்ஸ் சந்தேகம்
கணுக்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பது சந்தேகம். ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், ''கம்மின்சின் காயத்துக்கு 'ஸ்கேன்' எடுக்கப்பட உள்ளது. இதன் முடிவைப் பொறுத்து சாம்பியன்ஸ் டிராபியில் கம்மின்ஸ் விளையாடுவது முடிவாகும். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட், சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் முழு உடற்தகுதி பெற்றுவிடுவார்,'' என்றார்.