சாயக்கழிவு நீர் வெளியேற்றம்; விதிமீறல் நிறுவனம் சிக்குமா?
திருப்பூர்; திருப்பூரில் நேற்று மாலை, டி.எம்.எப்., பாலம் பகுதி கால்வாயில் இளஞ்சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது.
டி.எம்.எப்., பாலம் பகுதி வழியாக, சடையப்பன் கோவில் அருகே துவாரகாமயி கோவில் பகுதியை கடந்து, சக்தி தியேட்டர் அருகே, நொய்யலில் சென்று கலந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேல் சாயக்கழிவுநீர் ஓடியதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய (வடக்கு) அதிகாரிகள், இரவு, 7:00 மணி அளவில் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.
மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சடையப்பன் கோவில் அருகே கால்வாயில் சாயக்கழிவுநீர் ஓடியது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. டி.எம்.எப்., பாலம் முதலே, தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்தில் ஓடியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பட்டன் - ஜிப் டையிங் அல்லது சாயங்கள் வைக்கப்பட்ட பாலி பேக்களை சுத்தம் செய்து விடப்பட்ட தண்ணீராகவும் இருக்கலாம்.
மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை குழுவினர், நாளை முதல் (இன்று) லட்சுமி நகர் உள்பட சுற்றுப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். முறைகேடு சாய ஆலைகள் குறித்து தெரிந்தால், பொதுமக்கள், 80560 18568, 90429 57661 என்கிற எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு,அவர் கூறினர்.