மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன 16 முதல் ஆதியோகி ரத யாத்திரை!

சுசீந்திரம் முதல் ஆதியோகி வரை 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை திருநெல்வேலியில் ஜனவரி 16-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. அதே போல் சுசீந்திரத்தில் இருந்து கோவை ஈஷாவிற்கு 500 கி.மீ தூரம் ஆதியோகி தேருடன் பக்தர்கள் பாதயாத்திரை வர உள்ளனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருநெல்வேலி பிரஸ் கிளப்பில் இன்று (09/01/2025) நடைபெற்றது.

இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ஆறுமுகம் அவர்கள் பங்கேற்று பேசியதாவது, “ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு துவக்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை டிசம்பர் 11-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

அதேபோல் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை டிசம்பர் 22-ஆம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கூடங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் வரும் 16-ஆம் தேதி முதல் இந்த ரதம் பயணிக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன'21-ஆம் தேதி தொடங்கி தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வலம் வர இருக்கிறது. இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பினை வழங்க உள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்பணிக்கலாம்.

முன்னதாக டிச-26-ஆம் தொடங்கி ஜன'15-ஆம் தேதி வரையில் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இந்த ரதம் வலம் வந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனுடன் 'சிவ யாத்திரை' எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர்.

அந்த வகையில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆதியோகி திருவுருவச் சிலையுடன் கூடிய திருத்தேரினை நூற்றுக்கணக்கான சிவாங்கா பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரி வரை கிட்டத்தட்ட 500 கிமீ தூரம் பாத யாத்திரையாக இழுத்து வர உள்ளனர். வாகை மரத்தினால் செய்யப்பட்ட ஆதியோகி தேரின் எடை 2 டன் ஆகும். மேலும் அத்தேரில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று இருக்கும். வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் இந்தப் பாதயாத்திரை நிறைவுப்பெறும்.

மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா அதே நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. தெற்கு மண்டலத்தில் சாத்தூர், சிவகாசி, நாகர்கோவில் உள்ளிட்ட மொத்தம் 12 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை, கூடங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. திருநெல்வேலியில், திருநெல்வேலி சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள நெல்லை சங்கீத சபாவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இவ்விடங்களிலும் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி, கோவைக்கு வர விரும்பும் வெளி மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதியோகி ரதங்கள் மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன. மேலும் ரதங்கள் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளன.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது அவருடன் தன்னார்வலர்கள் பாபு மற்றும் இளங்கோ உடன் இருந்தனர்.

Advertisement