கால்நடைகளுக்கு தீவனமாகும் கம்பு; விவசாயிகள் பயிரிட அறிவுறுத்தல்

சூலுார்; 'கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் கம்பு பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்' என, வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ், கம்பு செயல் விளக்க திடல் அமைக்க இடையர்பாளையம் கிராமம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, ஐந்து ஏக்கர் பரப்பில் மாதிரி திடல் அமைக்கப்பட்டு கம்பு பயிரிடப்பட்டுள்ளது.

அங்கு, வேளாண் இணை இயக்குனர் புனிதா, வேளாண் உதவி அலுவலர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். கம்பு விதைப்பு, பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப விளக்கங்களை விவசாயிகளுக்கு விளக்கினர்.

இணை இயக்குனர் புனிதா கூறியதாவது:

சுல்தான்பேட்டை வட்டாரத்தில் அதிகளவு கால்நடைகள் மற்றும் கோழிகள் உள்ளன. அவற்றுக்கு தீவனமாகவும், நமக்கு தானியமாகவும் பயன்படும் கம்பு செயல் விளக்க திடல் இடையர்பாளையத்தில் அமைக்கப்படுள்ளது. விளைச்சல் நன்கு உள்ளது. அதிகளவு கம்பு பயிரிட்டு கால்நடைகளின் தீவன மேலாண்மைக்கு பயன்படுத்தலாம்.

கம்பின் தட்டுகளை ரோட்டாவேட்டர் மூலம் மடக்கு உழவு செய்து மண் வளத்தை மேம்படுத்தலாம். வேறு பயிர்கள் பயிரிடும் போது உரச்செலவு குறையும். மற்ற விவசாயிகளும் கம்பு சாகுபடி செய்ய முன் வரவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement