வெள்ளக்கிணர் ரயில்வே பாதைக்கு விமோசனம்

பெ.நா.பாளையம்; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, துடியலூர் அருகே வெள்ளக்கிணர் ரயில்வே லெவல் கிராசிங்கில் பழுதான பாதையை ரயில்வே துறை சீர்படுத்தியது.

கோவை -- மேட்டுப்பாளையம் இடையே தினசரி, 10 முறை பாசஞ்சர் ரயில் இயங்கி வருகிறது. இது தவிர கூட்ஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் இவ்வழியாக செல்கிறது. இந்த ரயில்வே கிராசிங்கில் ரயில் பாதையை ஒட்டி ரோடு பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்தது.

இதனால் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து இந்த ரயில்வே கிராசிங் வழியாக சத்தி ரோடு, கணபதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, ரயில்வே துறையினர் நேற்று காலை வெள்ளக்கிணர் ரயில்வே கிராசிங்கில் ரயில் பாதையை ஒட்டி பழுதடைந்து இருந்த ரோட்டை சரி செய்தனர்.

இதனால் சுப்பிரமணியம்பாளையம் பிரிவிலிருந்து உருமாண்டம்பாளையம் ரயில்வே கிராசிங் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சீர்படுத்திய ரோடு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement