கோழிப்பண்ணைக்கு எதிராக காத்திருப்பு போராட்டம்
சூலுார்; சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பாளையம் கிராமத்தில் முட்டை கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம விவசாயிகள், 50க்கும் மேற்பட்டோர் சூலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது: மலைப் பாளையத்தில் முட்டை கோழிப்பண்ணை அமைக்கும் பணி நடக்கிறது. பண்ணை அமைந்தால், கடும் துர்நாற்றம் வீசும். காற்று மாசடைந்து, சுற்றுச்சுழல் கடுமையாக பாதிக்கப்படும். தாசில்தார் பணிகளுக்கு தடை விதித்து இருந்தார். ஆனால், தடையை மீறி கட்டடப் பணிகள் நடக்கின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன், சூலூர் தாசில்தார் தனசேகர் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மற்றும் முட்டை கோழிப்பண்ணை உரிமையாளர், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்துவது எனவும், அதுவரை பணிகள் எதுவும் நடக்காது என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட மக்கள் கலைந்து சென்றனர்.