சொத்து வரி மேல்முறையீடு சட்ட திருத்தத்திற்கு எதிராக வழக்கு
மதுரை:உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பழனியப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு:
மாநகராட்சி பகுதி வீடுகள், இதர கட்டடங்களுக்கு சொத்துவரி விதிக்கப்படுகிறது. இதில், ஏதேனும் மாறுபாடு இருப்பதாக கருதினால், சார்பு நீதிபதி தலைமையிலான மாநகராட்சி தீர்ப்பாயத்தில், மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட விதிகளில், தமிழக அரசு, கடந்தாண்டு திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி, மேயர் தலைமையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
அதில், மாநகராட்சி கமிஷனர், துணை, உதவி கமிஷனர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட 18 பேர், உறுப்பினர்களாக இடம் பெறுவர். அங்கு தான், சொத்துவரி தொடர்பாக மேல்முறையீடு செய்ய முடியும். நிர்ணயித்த சொத்து வரியின் முழு தொகையையும் செலுத்தினால் தான், மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படும்.
சொத்து வரியை நிர்ணயிக்கும் அதிகாரம் உள்ளவர்களையே மேல்முறையீட்டிற்கு பொறுப்பாக்குவது ஏற்புடையதல்ல. மக்களுக்கு சுமை அதிகரிக்கும். திருத்தம் செய்தது சட்டவிரோதம்; அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலர், மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, பிப்., 26க்கு விசாரணையை ஒத்திவைத்தது.