தேர்தல் வராததால் ரொக்கப்பரிசு இல்லை

சென்னை:''பொங்கல் பரிசுத் தொகை வழங்காதது ஏன் என்ற கேள்விக்கு, 'இப்போது தேர்தல் வரவில்லை; வந்தால் பார்ப்போம்' என, அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

அ,தி.மு.க., - கோவிந்த சாமி: அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்த போது, பொங்கலுக்கு 2,500 ரூபாய் ரொக்கம், வெல்லம், பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, திராட்சை வழங்கப்பட்டன.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரினார். ஆனால், இந்த பொங்கலுக்கு பரிசுத் தொகை வழங்கவில்லை.

அமைச்சர் துரைமுருகன்: அ.தி.மு.க., ஆட்சியில் தேர்தல் நேரத்தில், 2,500 ரூபாய் கொடுத்தனர். இப்போது தேர்தல் வரவில்லை; வந்தால் பார்ப்போம்.

அமைச்சர் சக்கரபாணி: பொங்கல் பரிசுத்தொகை வழங்க துவங்கியதே, கருணாநிதி ஆட்சியில் தான். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், இரண்டு ஆண்டுகள் பொங்கல் பரிசுத்தொகை வழங்கவில்லை.

கொரோனா காலத்தில் 5,000 ரூபாய் வழங்க, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் வலியுறுத்தினார். அதை அ.தி.மு.க., அரசு ஏற்காமல், 1,000 ரூபாய் மட்டுமே கொடுத்தது.

அதனால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உடனே, 2.9 கோடி குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்பட்டது.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காததால், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை வழங்க முடியவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement