இரண்டாவது திருமணம் ஜூவல்லரி ஊழியர் கைது

விருத்தாசலம்: இரண்டாவது திருமணம் செய்து முதல் மனைவிக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் முல்லை நகரை சேர்ந்தவர் மோகன் மகன் சாய் கிருஷ்ணன், 29. இவரது மனைவி திவ்யா, 27. இருவருக்கும் கடந்த 2019ல் திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சாய் கிருஷ்ணன் சென்னையில் தங்கி, அங்குள்ள டைமண்ட் என்ற ஜூவல்லரியில் பணிபுரிந்து வருகிறார்.

அப்போது, அதே ஜூவல்லரியில் பணிபுரிந்து வரும் ஆந்திராவை சேர்ந்த கோமல் பன்வார் என்ற பெண்ணை கடந்தாண்டு ஜூலையில் இரண்டாவதாக திருமணம் செய்து, அங்கேயே குடும்பம் நடத்தி வந்துள்ளார். கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்த திவ்யா விசாரித்தபோது, இரண்டாவது திருமணம் செய்தது தெரிந்தது.

இது தொடர்பாக கணவரின் குடும்பத்தினரிடம் நியாயம் கேட்டபோது, சாய் கிருஷ்ணன், அவரது தந்தை மோகன், தாய் சத்யா மற்றும் இரண்டாவது மனைவி கோமல் பன்வார் ஆகியோர் திவ்யாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

திவ்யா புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, சாய் கிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.

Advertisement