'யார் அந்த சார்' பேட்சுடன் வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்: கடலுார் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேற்றம்
கடலுார்:கடலுார் மாநகராட்சி கூட்டத்திற்கு, 'யார் அந்த சார்' பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேற்றப்பட்டனர்.அவர்கள் 2 கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் சஸ்பெண்ட் செய்து, மேயர் உத்தரவிட்டார்.
கடலுார் மாநகராட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். கமிஷனர் அனு, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் பேசுகையில், மாநகராட்சியில் பல்வேறு வரிகள் பொதுமக்கள் செலுத்தாமல் உள்ளனர். வரி பாக்கி செலுத்த அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வேண்டும். மாநகராட்சி மக்களுக்கு பெஞ்சல் புயல் நிவாரணத்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
தொடர்ந்து கமிஷனர் அனு பேசும்போது, ' மக்கள் பணிகளை செய்யாத அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்படும். தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளாவிட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது எழுந்த தி.மு.க., கவுன்சிலர் நடராஜன், 'அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 'யார் அந்த சார்' என்ற பேட்ஜ் அணிந்து கூட்டத்திற்கு வந்துள்ளனர். பேட்சை கழற்றி வைத்துவிட்டு பேச அனுமதிக்க வேண்டும் என்றார். அதையடுத்து, 'யார் அந்த சார்' குறித்து சட்டசபையில் முதல்வர் விளக்கம் அளித்துவிட்டார். பிறகு ஏன் பேட்ஜ் அணிந்து வந்துள்ளீர்கள். எனவே, பேட்சை கழற்றிவிட்டு மக்கள் பிரச்னைகளை பேசுங்கள் என, மேயர் கூறினார்.
சஸ்பெண்ட்
மேயரின் பேச்சுக்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பரணி முருகன், தஷ்ணா, சங்கீதா, அலமேலு, வினோத் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர். அனைவரும் எழுந்து நின்று தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். பதிலுக்கு தி.மு.க., கவுன்சிலர்களும் அ.தி.மு.க., வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. மோதல் அதிகமானதால், போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., வினர் சபை விதிகளுக்கு புறமாக நடந்து கொண்டதால் அவர்களை கூட்டத்தில் வெளியேற்றவும், இரண்டு கூட்டங்களில் பங்கேற்காமல் சஸ்பெண்ட் செய்தும் மேயர் உத்தரவிட்டார்.
வெளியேற்றம்
அதையடுத்து, டி.எஸ். பி., ரூபன்குமார தலைமையில் போலீசார் வந்து சமாதானம் செய்தனர். அப்போது, பேட்ஜ் அணிந்திருந்த அ.தி.மு.க., கவுன்சிலர்களை வெளியே சென்று பேசிக்கொள்ளுங்கள் என்றனர். நாங்கள் மக்கள் பிரச்னைகளை பேச வந்துள்ளோம் என கூறினர். இருந்தும், ஒட்டுமொத்த அ.தி.மு.க., வினரும் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், நாங்கள் ஜனநாயக முறைப்படி எங்கள் கோரிக்கைகளை கேட்க வந்தோம்.
எங்களை சஸ்பெண்ட் செய்வதும், கூட்டத்தில் இருந்து வெளியேற்றுவதும் எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஏற்கனவே தி.மு.க., கவுன்சிலர்கள் 2 கோஷ்டியாக இருந்தபோது எத்தனையே முறை தகராறில் ஈடுபட்டனர்.
அப்போதெல்லாம் சஸ்பெண்ட் செய்யாத மேயர் இப்போது பேட்ச் அணிந்ததற்கு சஸ்பெண்டு செய்ய வேண்டுமா என கேள்வி எழுப்பினர். இது ஒருதலைபச்சமான செயல் என கூறினர்.
இச்சம்பவத்தால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.