பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

சேலம்: சேலம் பழநிமலை பாதயாத்திரை நண்பர் குழு சார்பில், 10ம் ஆண்டாக, பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமம், பழனிபால தண்டாயுதபாணி கோவிலில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆசிரம நிர்வாகி பாபு ராஜரிஷி தொடங்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து, காவடி எடுத்து நடைபயணத்தை தொடங்கினர்.

முன்னதாக முருகனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபி ேஷகம் செய்து பட்டாடை உடுத்தி, தங்க ஆபரணம் அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார், வேதங்கள் முழங்க அர்ச்சனை நடந்தது. பின் முருகனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சில பக்தர்கள், முருகன், வள்ளி, தெய்வானை வேடமணிந்து, காவடி துாக்கியபடி, பாத யாத்திரையை தொடங்கினர். இவர்கள், தைப்பூச நாளான, பிப்., 11ல் பழநி முருகனை தரிசனம் செய்வர். மேலும் கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் ஸ்ரீதிருமுருகன் திருச்சபை சார்பில், சேலம் அருகே பூலாவரி முருகன் கோவிலில், சிறப்பு பூஜை செய்து, கையில் வேல் ஏந்தி திரளானோர், பழநிக்கு பாதயாத்திரையை தொடங்கினர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'தினமும் அதிகாலை, 2:00 முதல், 7:00 மணி; மதியம், 3:00 முதல் இரவு, 10:00 மணி என, 50 கி.மீ., பயணிப்போம். தை முதல் நாளில் முருகனை தரிசிப்போம். அன்று இரவு பஸ் மூலம் சேலம் வருவோம்' என்றனர்.

Advertisement