விமான கண்காட்சிக்கு தாராள தண்ணீர் வசதி

பெங்களூரு: பெங்களூரு எலஹங்கா விமானப்படை தளத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் விமான கண்காட்சி நடக்கிறது. இது தொடர்பாக பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு விமான கண்காட்சியை ஒட்டி, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவின்படி, கண்காட்சிக்கு தேவையான குடிநீரை தடையற்ற முறையில் வினியோகிப்பதற்கு எங்கள் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

விமான கண்காட்சிக்கு ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மில்லியன் லிட்டர் காவிரி நீர் தேவைப்படும். ஆனால் குழாய் மூலம் தினமும் 25 மில்லியன் லிட்டர் வரை எங்களால் தண்ணீர் வழங்க முடியும்.

எதிர்பாராத இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்காக தண்ணீர் டேங்கர்களை நிறுத்த எங்களிடம் அவசர திட்டங்கள் உள்ளன.

காவிரி நீர்த்தேக்கங்களில் தற்போது தண்ணீரின் அளவு தேவைகளை கையாள போதுமான வகையில் இருக்கிறது. தண்ணீர் வினியோகத்தில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு இருந்தால், மாற்று நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement